ADDED : ஏப் 27, 2024 04:33 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் கோடை வெயில் காரணமாக பீர் விற்பனை 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மதுபானத்திற்கு தனி மவுசு உண்டு. இங்கு, பீர், விஸ்கி, பிராந்தி, ஒயின், ஓட்கா என, 1,300 மது வகைகள் விற்பனைக்கு உள்ளது.
சினி கோவா என அழைக்கப்படும் புதுச்சேரியில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு மது வகைகள் ஏராளமாக கிடைக்கிறது.
புதிய மது வகைகளை ருசிபார்ப்பதற்காக, நாடு முழுவதில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வருகின்றனர். வழக்கமாக கோடை காலங்களில் பீர் விற்பனை அதிகரிக்கும்.
தற்போது புதுச்சேரியில் 96 முதல் 98 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் குடிமகன்கள் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட பிராண்டுகளில் இருந்து மாறி, கூலிங்கான பீர் சாப்பிட விரும்புகின் றனர்.
புதுச்சேரியில் இந்திய பிராண்ட் மற்றும் வெளிநாடு பீர்கள் இறக்குமதி செய்து, 40 வகையான பீர்கள் விற்பனை செய்கின்றனர்.
வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த பெங்களூரு, மகாராஷ்டிரா, கோவா, காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் போன்ற பகுதிகளில் உற்பத்தியாகும் பீர்கள் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கோடை வெயில் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் பீர் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
மே மற்றும் ஜூன் மாத விற்பனைக்காக மதுபான கடை உரிமையாளர்கள் வழக்கமாக வாங்கும் அளவை விட கூடுதலாக 50 சதவீத பீர் வகைகளை வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.

