இ.சி.ஆரில் அதிகரித்து வரும் பேனர் கலாசாரத்தால் விபத்து அபாயம்
இ.சி.ஆரில் அதிகரித்து வரும் பேனர் கலாசாரத்தால் விபத்து அபாயம்
ADDED : செப் 27, 2026 06:13 PM

புதுச்சேரி: புதுச்சேரி – சென்னை இ.சி.ஆர்., பிள்ளைச்சாவடி முதல் கனகசெட்டிகுளம் வரையில் தினமும் அதிகரித்து வரும் பேனர் கலாசாரத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, அச்சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மின் கம்பங்களில் மட்டுமன்றி, சாலையின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகள் மற்றும் ஓரங்கள் முழுவதையும் ஆக்கிரமித்து பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்கள் கட்டப்படுகின்றன.
எப்போதும் அதிவேகமாகவும், அதிக அளவிலான வாகனப் போக்குவரத்தும் நிறைந்துள்ள இந்த முக்கியச் சாலையில், இருபுறமும் வரிசையாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் டிரைவர்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்துகின்றன.
மேலும், சென்டர் மீடியன் மற்றும் சாலை வளைவுகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் எதிரே மற்றும் பக்கவாட்டில் வரும் வாகனங்களை மறைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, காற்றின் காரணமாக சாலையோரம் உள்ள பேனர்கள் சரிந்து அவ்வழியாக செல்லும் பைக்கள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
எனவே, சட்டவிரோதமாகச் சாலையை ஆக்கிரமித்துப் பேனர்கள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, உடனடியாக அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
