உல்லாஸ் திட்டத்தில் எழுத்தறிவு எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு
உல்லாஸ் திட்டத்தில் எழுத்தறிவு எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு
UPDATED : செப் 27, 2026 06:18 PM
ADDED : செப் 27, 2026 06:13 PM

புதுச்சேரி: உல்லாஸ் திட்டத்தின் கீழ் கல்வி பயின்றவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு நடந்தது.
புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் பொருட்டு, மாநில எழுத்தறிவு மையம் சார்பில், மத்திய அரசின் நிதியுதவியுடன் உல்லாஸ் திட்டம் துவங்கப்பட்டு, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதியில் 170 கற்றல் மையங்களில் 15 வயதிற்கு மேற்பட்டோர் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி பயின்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆறு மாதங்களாக கல்வி பயின்றவர்களுக்கான 'அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு' நேற்று நடந்தது. அதன்படி, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடந்த தேர்வில், 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
ரெட்டியார்பாளையம், அரசு தொடக்க பள்ளியில் நடந்த தேர்வினை, திட்டத்தின் நோடல் அதிகாரி சுகுணா சுகிர்தாபாய் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதில், தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் 'கற்றவர்' என்ற சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம்.
