கடலுார் வாலிபரிடம் வெள்ளி பொருட்கள் பறிப்பு :2 பேர் கைது
கடலுார் வாலிபரிடம் வெள்ளி பொருட்கள் பறிப்பு :2 பேர் கைது
UPDATED : ஜூலை 13, 2026 11:43 PM
ADDED : ஜூலை 13, 2026 08:40 PM
புதுச்சேரி: கடலுார் வாலிபரை புதுச்சேரி அழைத்து ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், கூத்தப்பாக்கம், பாரதியார் நகரை சேர்ந்தவர் சஞ்சய், 23; கார்பெண்டர். இவர், இன்ஸ்டாகிராம் மூலம் புதுச்சேரி, துத்திப்பட்டு, மாதா கோவில் வீதியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஜெயக்குமார், 29; என்பவருடன் பழக்கி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி சஞ்சயை மொபைலில் தொடர்பு கொண்ட ஜெயக்குமார், மண்ணாடிப்பட்டு ஏரிக்கரைக்கு மது அருந்த வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து, கண்டமங்கலத்தில் தந்தையுடன் கார்பெண்டர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சஞ்சய், அங்கிருந்து ஜெயக்குமார் அழைப்பின் பேரில் மண்ணாடிப்பட்டு ஏரிக்கரைக்கு சென்றுள்ளார்.
அங்கு, ஜெயக்குமார், அவரது நண்பர் உழவர்கரை, விவேகானந்தர் வீதியை சேர்ந்த ஜெகன்நாதன் மகன் ஜெயபிரதாபன், 29; ஆகியோருடன் இணைந்து சஞ்சய் மது அருந்தியுள்ளார். அப்போது, மது போதையில் ஜெயகுமார் மற்றும் ஜெயபிரதாப் இணைந்து, சஞ்சயை கையால் தாக்கி அவர் அணிந்திருந்த ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி செயின், குருமாத்து, அர்னாகயிறு மற்றும் மொபைல் ஆகியவற்றை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து சஞ்சய் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, ஜெயக்குமார், ஜெயபிரதாபன் ஆகியோர் நேற்று கைது செய்தனர்.
பின், அவர்களிடம் பறித்து சென்ற பொருட்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெயபிரதாபன் மீது கண்டமங்கலத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், புதுச்சேரி தன்வந்தரி நகரில் ஒரு கஞ்சா வழக்கும், ஜெயக்குமார் மீது கண்டமங்கலத்தில் 2 வழிப்பறி வழக்கும் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.
