பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு 8 ம் தேதி வரை விண்ணப்பம் வரவேற்பு
பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு 8 ம் தேதி வரை விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 02, 2026 05:11 PM
புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு வரும் 8 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசை, நடனம் மற்றும் நுண்கலைகள் ஆகிய மூன்று முக்கிய துறைகளின் கீழ், மாணவர்களைச் சிறந்த தொழில்முறை கலைஞர்களாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு இளநிலை பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது.
இக்கல்லுாரியில் நீட் நுழைவுத்தேர்வு அல்லாத, 4 ஆண்டுகள் கால அளவு கொண்ட இரு முக்கிய இளநிலைக் கவுரவ பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அவை நுண்கலை இளங்கலை (பி.எப்.ஏ., ஹானர்ஸ்) மற்றும் நிகழ்கலை இளங்கலை (பி.பி.ஏ., ஹானர்ஸ் ) ஆகியவையாகும்.
இங்குள்ள இசை துறையில் குரலிசை, வீணை, வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளும், நடனத் துறையில் பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டமும் பயிற்றுவிக்கப்படுகின்றன. நுண்கலைத் துறையைப் பொறுத்தமட்டில் வரைதல், ஓவியம், ஜவுளி வடிவமைப்பு, காட்சித் தொடர்பு வடிவமைப்பு மற்றும் சிற்பக்கலை ஆகிய முதன்மைப் பாடங்களுடன், கூடுதல் திறன்களாக நிழற்படக் கலை, அச்சுப் பதித்தல், கணினி வரைவியல் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் கற்றுத்தரப்படுகின்றன.
இப்படிப்புகளுக்கு சென்டாக் வாயிலாக சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
நுண்கலைத் துறைக்கு 40 இடங்களும், இசைத் துறைக்கு 20 இடங்களும், நடனத் துறைக்கு 15 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. லேட்ரல் என்ட்ரி முறையில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை நேரடியாக அணுக வேண்டும்.
மாணவர்களின் சேர்க்கைக்கான இறுதித் தகுதிப் பட்டியல் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவைப் பொறுத்து மாறுபடுகிறது. நுண்கலை படிப்பிற்கான சேர்க்கை 60:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் நடைபெறும். அதாவது, கல்லூரி நடத்தும் பொது அறிவுத் திறனாய்வுத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு வரைதல், வண்ணம் தீட்டுதல், சிற்பக்கலை மதிப்பெண்களுக்கு 60 சதவீத முக்கியத்துவமும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் 40 சதவீத முக்கியத்துவமும் அளிக்கப்பட்டு தரவரிசை தயார் செய்யப்படும். ஆனால், இசை மற்றும் நடனப் படிப்புகளுக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இறுதித் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
ஒரே மாதிரியான தகுதி மதிப்பெண்களை ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றிருந்தால் வயதில் மூத்த விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பிறந்த தேதியும் ஒரே நாளாக இருக்கும் பட்சத்தில், கணினி வழியிலான குலுக்கல் முறை மூலம் மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்படும். இக்கல்லுாரியில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 8 ம் தேதிக்குள் சென்டாக் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
