கிருமாம்பாக்கம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா
கிருமாம்பாக்கம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா
ADDED : ஜூலை 20, 2026 08:41 PM
பாகூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த, கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி ஜனனி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில், 500க்கு, 460 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இச்சாதனை, மாணவர்களின் விடாமுயற்சிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான கற்பித்தலுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் துணை முதல்வர் கருணாகரன், தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் தொடர்ந்து வழங்கிய வழிகாட்டுதல், ஊக்கம் மற்றும் சிறப்புப் பயிற்சியே முக்கிய காரணமாக அமைந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவி ஜனனியின் சாதனையை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களும், உயரிய இலக்குகளை அடைய முடியும் என்பதை இந்த வெற்றி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
