ADDED : ஜூலை 19, 2026 06:12 PM
புதுச்சேரி: இந்திரா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல் துாண் மீது கார் மோதியதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் இந்திரா சதுக்கம், ராஜிவ் சதுக்கம், அஜந்தா சிக்னல் உள்ளிட்ட பிசியான சிக்னல்களில், கோடைக் காலத்தில், அரசு சார்பில் ஆண்டு தோறும் பசுமைப்பந்தல் அமைக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் சிக்னல்களில் நிற்கும் போது, வெளியிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து சென்றனர்.
இந்த ஆண்டும், போக்குவரத்து அதிகம் உள்ள சிக்னல்களில், அரசு சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. வழக்கம்போல் இல்லாமல், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் இதுவரை குறையாமல், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே சிக்னல்களில் அமைக்கப்பட்ட பசுமை பந்தல்கள் இதுவரை அகற்றவில்லை. இந்நிலையில், நெல்லித்தோப்பில் இருந்து இந்திரா சதுக்கம் வரும் வழியில், நேற்று காலை 5:30 மணியளவில் வோல்ஸ் வேகன் கார் ஒன்று பசுமை பந்தல் துாண் மீது மோதியது. இதில், பந்தல் ஒரு பக்கமாக சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசார், இந்திரா சிக்னலில் இருந்து நெல்லித்தோப்பு மார்க்க சாலையை இருவழியாக மாற்றி வானங்களை அனுப்பி வைத்தனர்.
பின் கிரேன் வரவழைக்கப்பட்டு, பந்தல் சரி செய்யப்பட்டு, போக்குவரத்து சீரானது. விபத்து ஏற்படுத்திய கார் குறித்து அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை வைத்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
