ADDED : ஜூலை 07, 2026 06:44 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். 8 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் ஒயிட் டவுன் டவுன் பகுதியில் கடந்த சில மாதங்களாக பைக்குகள் திருடு போயின. இதுகுறித்து பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., சுருதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சிறப்பு தனிப்படை போலீசார் கடந்த 6ம் தேதி அண்ணா சாலை– 45 அடி சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக ஹீரோ ஸ்பிளண்டர் சந்தேகப்படும்படி வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர், சென்னை, கோடம்பாக்கம், டாக்டர் சுப்ராயலு நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்த ராமுலு மகன் ரமணா (எ) பாபு, 53, டிரைவர் என்பதும், அவர் ஓட்டி வந்த பைக் புதுச்சேரி, யூகோ வங்கி எதிரே இருந்து திருடி வந்தது தெரியவந்தது.
விசாணையில், புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான 8 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதில், 3 பைக்குகள் பெரியக்கடை போலீஸ் நிலைய எல்லையிலும், விழுப்புரம், சென்னை கோயம்பேடு பகுதிகளில் தலா 2 பைக்குகள், பல்லாவரம், ஆத்துார் பகுதிகளில் தலா 1 பைக்கை திருடியது தெரியவந்தது.
பின், ரமணாவை போலீசார் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ரமணா மீது எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் கார் திருட்டு, பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
