/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்சாலைகள் வெளியேறுவதால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது; முதல்வர் ரங்கசாமி வேதனை
/
தொழிற்சாலைகள் வெளியேறுவதால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது; முதல்வர் ரங்கசாமி வேதனை
தொழிற்சாலைகள் வெளியேறுவதால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது; முதல்வர் ரங்கசாமி வேதனை
தொழிற்சாலைகள் வெளியேறுவதால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது; முதல்வர் ரங்கசாமி வேதனை
ADDED : மார் 01, 2025 05:56 AM
புதுச்சேரி: தொழிலாளர் துறை சார்பில், தொழில் நல்லுறவு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி அரங்கில் நடந்தது.
தொழிலாளர் துறை ஆணையர் யாசம் லட்சுமிநாராயணரெட்டி வரவேற்றார். ரமேஷ் எம்.எல்.ஏ., தொழிலாளர் துறை செயலர் ஹெயந்த்குமார் ரே ஆகியோர் வாழ்த்தி பேசினர். டாக்டர் கவிதாசன், வழக்கறிஞர் மோகன்தாஸ், சட்ட வல்லுநர் முகுந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதல்வர் ரங்கசாமி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
புதுச்சேரியில் சிறு, குறு தொழிற்சாலைகள் 1,200 உள்ளது. இதில், 85 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சலுகை நிறுத்தம், தொழிலாளர் பிரச்னைகளால், பெரிய தொழிற்சாலைகள் வெளியேறுவதால், வேலை வாய்ப்பும் குறைந்துள்ளது.
முதலீட்டாளர்கள், எளிய முறையில் தொழில் துவங்க அனுமதியளிக்க வேண்டும். அவர்களுக்கு 3 மாதங்களில் கிடைக்க வேண்டிய அனுமதி, ஓராண்டு வரை இழுபறி ஏற்படுவதால், தொழில் துவங்கவே கஷ்டம் என்றால், தொழிலை நடத்துவது கஷ்டம் என நினைத்து போய்விடுவர்.
இன்ஜினீயரிங் படித்த மாணவர்கள், எல்.டி.சி., யு.டி.சி., ஊர்காவல் படை பணிக்கு தேர்வு எழுதுகின்றனர். அவர்களின் இன்ஜினீயரிங் அறிவை, பயன்படுத்த முடியாமல் போகிறது.
தொழிலதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவ வேண்டும். ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்னை நீண்டகாலம் நீடித்து, நல்லுறவு ஏற்படாமல், நிறுவனத்தையே காலி செய்து சென்றுவிட்டனர். இதனால் 300 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தொழிற்சாலைக்கு வெளியே உள்ள சங்கங்களின் தலையீடும் உள்ளது.
சேதராப்பட்டில், புதிய தொழிற்சாலை கொண்டு வந்து, அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்றார்.