/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கொத்தமல்லி கட்டு விலை விர்ர்ர்...
/
புதுச்சேரியில் கொத்தமல்லி கட்டு விலை விர்ர்ர்...
ADDED : மே 31, 2024 02:32 AM
புதுச்சேரி: கொத்தமல்லி கட்டின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் அனைத்து காய்கறி கடைகளிலும் இலவசமாக தருவது நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக காய்கறிகள் வாங்குபவர்களுக்கு கருவேப்பிலை, கொத்தமல்லித் தழையை குறிப்பிட்ட அளவு இலவசமாக கொடுப்பது கடைக்காரர்களின் வழக்கம். ஆனால், புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக வியாபாரிகள் கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லியை இலவசமாக தருவதில்லை.
குறிப்பாக கொத்தமல்லியை யாராவது இலவசமாக கேட்டாலே கட்டுபடியாகாது. இலவசமாக தர முடியாது. 20 ரூபாய் கொடுத்தால் ஒரு சிறிய கட்டு தருகிறேன் என, எரிந்து விழுகின்றனர்.
இவ்வளவு காய்கறி வாங்கி இருக்கேன். கொஞ்சம் கூட கொத்தமல்லித் தழை தர கூடாதா. இனி உன் கடை பக்கமே வர மாட்டேன் என்று பதிலுக்கு காய்கறி வாங்கும் மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோபித்தபடி செல்லுன்றனர். இப்படி அனைத்து காய்கறி கடைகளில் இலவச கொத்தமல்லி தழை கேட்டு பெரிய சண்டையே நடந்து வருகிறது.
இது குறித்து காய்கறி கடை உரிமையாளர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் சூளகிரி, ஓசூர், தளி, கெலமங்கலம் வட்டாரத்தில் மட்டும் தான் கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இதை மையமாக வைத்து சூளகிரியில் கொத்தமல்லி மார்க்கெட் இயங்குகிறது.
இங்கிருந்து, தான் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்திற்கு கொத்தமல்லி அனுப்பப்படுகிறது.
கோடை மழையால், சூளகிரி, ஓசூர், தளி, கெலமங்கலம் கொத்தமல்லி தோட்டங்களில் தண்ணீர் தேங்கி செடி அழுகியது. அதனால் மார்க்கெட்டுகளுக்கு வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.
ஓசூர் உழவர் சந்தையிலேயே ஒரு கிலோ கொத்தமல்லி, 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. அங்கிருந்து புதுச்சேரி கொண்டு வந்து ௨50 ரூபாய் வரையில் விற்கின்றனர்.
புதுச்சேரியில் தினமும் இரண்டு டாரஸ் லாரிகளில் 12 டன் கொத்தமல்லி வரும். தற்போது 6 டன் தான் கொத்தமல்லி தழை வருகிறது. அதிலும் பாதி அழுகி போய் அலங்கோலமாக உள்ளது. வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விலை குறையலாம்.
தற்போது கொத்தமல்லி விலை உச்சத்தை அடைந்துள்ளது. பொதுமக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்' என்றனர்.
எது எப்படியோ, சமையலில் மல்லித்தழை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் இதன் விலை உயர்வு இல்லத்தரசிகளை கவலையடைய செய்துள்ளது.