புதுச்சேரி : புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறையில் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போராட்டம் நடத்தியவர்களிடம் துணை இயக்குனர் தயாளன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, திப்புராயப்பேட்டையில் லுார்து மேரி என்பவரின் ரேஷன் கார்டில் அவரது பெயரை நீக்கியுள்ளனர். திருமண விவாகரத்து பெற்ற ஆவணம் இன்றி அதிகாரிகள், இரண்டாவது மனைவியின் பெயர் மற்றும் குழந்தைகள் பெயரை சட்ட விரோதமாக சேர்த்துள்ளனர்.
இதனால் முதல் மனைவியின் குழந்தைகள் உயர் கல்வி படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்த விவகாரத்தில் தவறு செய்துள்ள அதிகாரியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன்கார்டு பெயர் நீக்கம் இரண்டு நாட்களுக்குள் சரி செய்து தரப்படும் என்று குடிமை பொருள் துணை இயக்குனர் தயாளன் உறுதி அளித்தார். அதையேற்று போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.