/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்திப்பு துளிகள்
/
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்திப்பு துளிகள்
ADDED : ஜூலை 09, 2024 04:44 AM
எமகண்டத்தை தவிர்த்த எம்.எல்.ஏ.,க்கள்
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா சந்தித்து பேச காலை 10 மணிக்கு வர வேண்டும் என அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் திங்கள்கிழமையில் 10.30 மணி முதல் 12.00 மணி வரை எமகண்டம் என்பதால் மேலிட பொறுப்பாளரை சந்திப்பதை தவிர்த்து மதியம் 12.15 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வந்து மேலிட பார்வையாளரை சந்தித்தனர்.
வீடியோ காலில் வந்த
ஏனாம் எம்.எல்.ஏ.,
அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணம்சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, வெங்கடேசன், ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கர் ஆகியோர் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்து பேசினர். இவர்களுடன் இருக்கும் ஏனாம் எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் நேரில் வரவில்லை. அவர் வீடியோ காலில் வந்து மேலிட பொறுப்பாளரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஏன் வெளியே சொன்னீங்க
அங்காளன்
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ., அங்காளன் முதல்வர் ரங்கசாமி கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வளைதளத்திலும் வைரலானது. இது தொடர்பாக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அங்காளன் எம்.எல்.ஏ., விடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அங்காளன் எம்.எல்.ஏ., உங்களிடம் பல முறை தெரிவித்தாகிவிட்டது. ஆனாலும் கேட்கவில்லை. எனவே தான் மக்களின் பார்வைக்கு சொல்லவேண்டியதாகிவிட்டது என்று சொல்ல, கூட்டம் சில நிமிடங்கள் மவுனமானது.
கட்சி கூட்டத்தில் பங்கேற்காத
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சி அலுவலகத்தில் நுழைந்து கொண்டிருந்தபோது மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. கட்சி கூட்டத்தின் போது பா.ஜ., எம்.எல்.ஏக்கள் கட்டாயம் பங்கேற்பர். மேடையிலும் அமருவர். ஆனால் நேற்று கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் நேரடியாக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அறையில் சென்று ஒட்டுமொத்தமாக அமர்ந்தனர்.