/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜவ்வாக இழுக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களால் அதிருப்தி: கவர்னர், முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்
/
ஜவ்வாக இழுக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களால் அதிருப்தி: கவர்னர், முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்
ஜவ்வாக இழுக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களால் அதிருப்தி: கவர்னர், முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்
ஜவ்வாக இழுக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களால் அதிருப்தி: கவர்னர், முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்
ADDED : பிப் 25, 2025 04:45 AM

புதுச்சேரி, பிப். 25- புதுச்சேரியின் உட்கட்டமைப்பு திட்டங்கள் ஜவ்வாக இழுப்பதால், அரசின் நிதி வீணாகி வருகிறது.
புதுச்சேரி இந்திரா சிக்னல் முதல் ராஜிவ் சிக்னல் வரை மேம்பால திட்டத்திற்கும், 20 கி.மீ., துாரத்திற்கு கடலுார் சாலை விரிவாக்க திட்டத்திற்கும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் 1,000 கோடி வழங்க ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பு ஒரு பக்கம் மகிழ்ச்சியளித்தாலும், மற்றொரு பக்கம் மக்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் எந்த திட்டத்தை எடுத்தாலும் காலத்தோடு முடிப்பதில்லை. சரியான திட்டமிடலும் இருப்பதில்லை. ஏற்கனவே நகரம் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. இதனால் மேம்பால கட்டுமான பணிக்காக சிக்னலையும், ரோட்டை குதறிபோட்டு பல ஆண்டுகளாக இழுத்தடித்தால் என்ன ஆவது என்று இப்போதே விழிபிதுங்க ஆரம்பித்துள்ளனர்.
இப்பவே கண்ண கட்டுது
இதற்கு உதாரணம், தட புடலாக துவங்கப்பட்ட உப்பனாறு மேம்பாலம் கடந்த 2008ம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் முடிந்தபாடில்லை. அடுத்து அண்ணா திடல், புது பஸ்டாண்ட் 90 சதவீதம் முடிந்தும் கூட கடைகள் கட்டுமான சிக்கலில் சிக்கி, திறக்கப்படாமல் முடங்கி கிடக்கிறது. இதேபோல் கலவை கல்லுாரி, தாவரவியல் பூங்கா என, எந்த திட்டங்களையும் காலத்தோடு முடித்து திறக்காமல் அப்படியே பல ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்தடித்து வருகின்றனர். பெரிய திட்டங்கள் மட்டுமின்றி, சிறிய உட்கட்டமைப்பு திட்டம் என்றாலும் இதே நிலை தான் உள்ளது.
எதிர்கேள்வி
குறிப்பாக நீதிமன்ற வழக்கு, ஒப்பந்தரதாரர் விலகல் என பல ஆண்டுகளாக திட்டங்கள் இழுத்தடிக்கப்படுகிறது. இதற்கு மறைமுறையாக அந்தந்த துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.
இதன் காரணமாகவே, எந்த புதிய திட்டங்களையும் ஆரம்பிக்க புதுச்சேரி அரசு பிள்ளையார் சுழிபோட்டாலும், எப்போது முடிப்பீர்கள் என்பதே மக்களின் எதிர் கேள்வியாக உள்ளது.
பிளானே மோசம்
புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க மத்திய அரசு கடந்த 2017ல் அனுமதி கொடுத்தது. இதன்படி புதுச்சேரி நகர பகுதியில் 1,468 ஏக்கர் பரப்பளவில் திட்ட மதிப்பீடு 1,828 கோடி ரூபாயில் பணிகள் நடக்க வேண்டும். இருக்கிற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை வைத்துக்கொண்டு இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்தி இருக்கலாம்.
ஆனால், பிளான் போடுகிறோம் என பல ஆண்டுகள் இழுத்தனர். இறுதியில் சரியான திட்டமிடல் இல்லாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ரூ.620 கோடியாக சுருங்கிவிட்டது. பிளான் போடுவதை பல ஆண்டுகளாக இழுத்தடிக்கும் கூத்து புதுச்சேரியில் மட்டுமே நடந்து வருகிறது.
மக்கள் எதிர்பார்ப்பு
மாநிலத்தில் வரியில்லாமல் ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி.,கலால், பத்திரபதிவு, போக்குவரத்து துறைகளை தவிர்த்து பார்த்தால் சொல்லிக்கொள்ளும்படி மாநிலத்திற்கு சொந்த வருவாய் இல்லை. மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது.
மற்றொரு பக்கம், சரியான திட்டமிடல் இல்லாததால், கிடைக்கும் பல கோடி ரூபாய் திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல், கடைசியில் கைவிடுவதை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. இப்படி தான் பல கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட வேண்டிய குபேர் பெரிய மார்க்கெட் திட்டமும் கைவிடப்பட்டது.
அந்த வரிசையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பால திட்டமும், கடலுார் சாலை விரிவாக்க திட்டமும் சேர்ந்துவிட கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாநிலத்திற்கு அளவிற்கு அதிகமாகவே ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். சிலர் டம்மி துறையில் சும்மாகவே உட்கார வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உட்கட்டமைப்பு திட்டத்தை கண்காணிக்க பயன்படுத்தலாம்.
ரயில்வே திட்டங்களை முக்கியத்துவம் கொடுக்க தனி செயலர் நியமிக்கப்பட்டதை போன்று, உட்கட்டமைப்பு திட்டங்களை காலத்தோடு முடிக்க தனி அரசு செயலரை நியமிக்க கவர்னர், முதல்வர் உத்தரவிட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே உட்கட்டமைப்பிற்கான கட்டுமான பணியில் ஏற்படும் தடங்கல்கள் சரியாகி, மாநில வளர்ச்சி ஏற்படும்.

