/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோரிமேடு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
கோரிமேடு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : மார் 04, 2025 09:44 PM

புதுச்சேரி : கோரிமேடு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது, கடை வியாபாரிகள், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால், நகரத்தில் முக்கிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.
போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவின் பேரில், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜிவ் சிக்னல் முதல் கோரிமேடு எல்லை வரை, போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை ஆகற்றி கொள்ள, உழவர்கரை நகராட்சியினர் ஏற்கனவே வியாபாரிகளிடம் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி கொள்ளாமல் இருந்தன.
இந்நிலையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் ரமேஷ்குமார், உழவர்கரை நகராட்சி இளநிலை பொறியாளர்கள் கருணாநிதி, சேகர் முன்னிலை ராஜிவ் சிக்னலில் இருந்து கோரிமேடு வரை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், விளம்பர பலகை உள்ளிட்டவை அதிரடியாக அகற்றினர்.
கடைகளை அகற்ற கூடாது என, கடை வியாபாரிகள், ஒன்று திரண்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில், இருந்த கோரிமேடு போலீசார், வியாபாரிகளை தடுத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆக்கிரமிப்பு கடைகள், தகர ஷீட்டுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் லாரிகள் மூலம் எடுத்து சென்றனர். அதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.