UPDATED : ஜூலை 29, 2026 09:24 PM
ADDED : ஜூலை 29, 2026 08:31 PM

அரியாங்குப்பம்: புதுச்சேரியில் நண்பர்களுடன் கடலில் குளித்த தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் மாயமானார்.
கரியமாணிக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர் மகன் பேரரசு,19; கிருமாம்பாக்கம் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் பி.சி.ஏ., இறுதியாண்டு படித்து வந்தார். கல்லுாரிக்கு சென்று விட்டு, இரண்டு நண்பர்களுடன் தவளக்குப்பம் அருகே உள்ள நல்லவாடு கடற்கரைக்கு சென்றனர். மூவரும் மதியம் 1:30 மணியளவில் கடலில் இறங்கி குளித்தனர்.
அப்போது, பேரரசு ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். அவருடன் குளித்த இரண்டு நண்பர்கள் கூச்சலிட்டு, அவரை மீட்க முடியாமல் கரைக்கு வந்து அப்பகுதியில் இருந்த மீனவர்களிடம் கூறினர். உடனடியாக மீனவர்கள் படகில் சென்று தேடியும் அவர் கிடைக்கவில்லை. தவலறிந்த கடலோர போலீசார், மாயமான மாணவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் மாயமான சம்பவம், கல்லுாரி மற்றும் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் மறியல்:
கடல் அலையில் சிக்கி மாயமான மாணவரின் பெற்றோர் தவளக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் காலதாமதமாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த கல்லுாரி மாணவர்கள் தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் முன், நேற்று மாலை 5:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால், கடலுார் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
