பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு
பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூலை 29, 2026 08:31 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், பசுமை திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாசுகட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் புதுச்சேரி மாசு கட்டுப் பாட்டு குழுமத்தின் கீழ் செயல்படும் சுற்றுச் சூழல் தகவல், விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு மையம் மூலம் பசுமை திறன் மேம்பாட்டு திட்டதின் கீழ், இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.
64 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி, வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரியை தவிர்த்து மற்ற இடங்களில் இருந்து வருபவர்களுக்கு தங்கும் விடுதியும், உணவும் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு பயிற்சிக்கும் இருபது பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதில், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.
இப்பயிற்சியை முடிப்பவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சிக்கு வரும் 1ம் தேதி முதல், 21ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி மற்றும் விபரங்களுக்கு https://dste.py.gov.in/ppcc/ என்ற இணையதளம் வாயிலாகவும், 9786368856, 8056972562 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
