ADDED : ஜூன் 19, 2026 08:32 PM
விழுப்புரம்: வானுாரில் ஜமாபந்தி முகாமில் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஒட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 30; விவசாயி. இவர், தனது நிலத்தின் பட்டா பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்து, அந்த கிராம வி.ஏ.ஓ.,வான கண்டமங்கலத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, 40; என்பவரை அணுகியுள்ளார்.
அதற்கு கலைச்செல்வி, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், வானுார் தாலுகா அலுவலகத்தில் நடந்து வரும் ஜமாபந்தி முகாமிற்கு வந்து, பணத்தை கொடுத்தால், பட்டா பெயர் மாற்றம் பணியை உடனே செய்து முடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பிரபு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி, கடந்த 17ம் தேதி ரசாயனம் தடவிய பணத்துடன், வானுார் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு சென்ற பிரபு, பட்டா மாற்றத்திற்காக வி.ஏ.ஓ., கலைச்செல்வியிடம் 8,000 ரூபாயை கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கலைச்செல்வியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதனையடுத்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுத்த ஆர்.டி.ஒ., முருகேசன், லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ., கலைச்செல்வியை நேற்று, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
