/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு கட்டுரை போட்டி
/
ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு கட்டுரை போட்டி
ADDED : ஜூன் 28, 2024 06:18 AM

புதுச்சேரி: ஜி.எஸ்.டி., தினத்தையொட்டி மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி புதுச்சேரி ஆணையர் அலுவலகம் சார்பில், நடந்த விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் கல்லுாரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
நாடு முழுதும் ஜி.எஸ்.டி., வரித் திட்டம், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அமலாக்கப்பட்டதை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜூலை 17ம் தேதி ஜி.எஸ்.டி., தினம் கொண்டாப்பட்டு வருகிறது.
மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி புதுச்சேரி ஆணையர் அலுவலகம் சார்பில், வரும் 1ம் தேதி இந்தாண்டிற்கான ஜி.எஸ்.டி., தின விழா கொண்டாடப்படுவதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ஒருங்கிணைத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேற்று நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் ஜி.எஸ்.டி.,யின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் கட்டுரை போட்டி, கடற்கரை சாலையில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி பகுதியில் உள்ள பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். ஆணையர் பத்மஸ்ரீ தலைமை தாங்கினார். கூடுதல் ஆணையர் பிரஷாந்த் குமார் காக்கர்லா வாழ்த்தி பேசினார்.
கட்டுரை போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வரும் 1ம் தேதி நடக்கும் ஜி.எஸ்.டி., தின விழாவில் பரிசு வழங்கப்படும். ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், சுரேந்தர், குமரேசன், ஆய்வாளர் கபில் கந்தல்வால் செய்திருந்தனர்.