/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோடை பயிற்சியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
/
கோடை பயிற்சியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 27, 2024 04:32 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கோடை சிறப்பு பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் ஜவஹர் சிறுவர் இல்லம், குழந்தைகளுக்காக பரதம், கிராமியம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், ஓவியம், கைவினை, கிதார், கீபோர்டு, டிரம்ஸ், கையெழுத்து பயிற்சி ஆகிய கலைகளையும் கேரம், செஸ், இறகு பந்து, டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டுகளையும் கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சிறப்பு பயிற்சியில், 6 வயது முதல், 16 வயதுள்ள, புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். கோடை வகுப்புகள் வரும், மே 2ம் தேதி முதல் வரும் மே 31ம் தேதி வரை காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை, நடக்க உள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்களை புதுச்சேரி, ஜவஹர் இல்லம்; லாஸ்பேட்டை, கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி; கதிர்காமம், அரசு மேல்நிலைப்பள்ளி; நோனாங்குப்பம், அரசு மேல்நிலைப்பள்ளி; வில்லியனுார், அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி ஆகிய மையங்களில், வரும், 29,ம் தேதி முதல் பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்த படிவங்களை, மாணவர்களின் படிப்பு சான்றிதழ், பள்ளி அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் ஸ்டாம்ப் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0413-2225751, என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

