/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியோருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கல்
/
முதியோருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கல்
ADDED : பிப் 15, 2025 07:24 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் 70 வயதை கடந்த முதியோருக்கு இலவச மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை கவர்னர் கைலாஷ்நாதன் வழங்கினார்.
ஆயுஷ்மான் பாரத் வே வந்தனா திட்டம் கடந்த ஆண்டு அக்., 29ம் தேதி பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 70 வயதை கடந்த முதியோர்கள் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறலாம். அவர்கள் நாடு முழுதும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் உள்நோயாளியாக இலவச மருத்துவ சிகிச்சை பெற்று பயன்பெறலாம்.
அதன்படி, ஆயுஷ்மான் வே வந்தனா காப்பீடு திட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்த 8 ஆயிரத்து 242 பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த முதியோர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று நடந்தது. கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, முதியோர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை வழங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார், ரமேஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சுகாதார துறை செயலாளர் ஜெயந்தகுமார் ரே, இயக்குனர் ரவிச்சந்திரன், மருத்துவ கல்லுாரி இயக்குனர் உதயசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.