கட்டட அனுமதிக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் இளநிலை உதவியாளருக்கு ‘காப்பு’
கட்டட அனுமதிக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் இளநிலை உதவியாளருக்கு ‘காப்பு’
ADDED : ஜூலை 07, 2026 05:52 PM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சியில் கட்டட அனுமதி வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் காவியவேந்தன். 31; டாக்டர். இவர், திருவெண்ணெய்நல்லுார், பாலாஜி கார்டனில் மருத்துவமனை வணிக வளாக கட்டடம் கட்டி வருகிறார். இந்த கட்டடத்திற்கு கட்டட அனுமதி பெற 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். 3 மாதங்களுக்கு மேலாகியும் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் அனுமதி வழங்க அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் பாலமுருகன், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத காவியவேந்தன், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் நேற்று காலை புகார் அளித்தார்.
இதையெடுத்து போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாயை காவியவேந்தன். பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த பாலமுருகனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார், இளநிலை உதவியாளர் பாலமுருகனை கையும் களவுமாக கைது செய்தனர்.
