/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு
/
கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : ஜூலை 27, 2024 04:51 AM

புதுச்சேரி: கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்சு துணை துாதரகம் எதிரே உள்ள கார்கில் போர் வீரர் நினைவிடத்தில் அரசு சார்பில் நேற்று கார்கில் போர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கார்கில் போர் வெற்றி தினமும் கொண்டாடப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு போர் வீரர் நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர் திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏக்கள் ரமேஷ், பாஸ்கர், சம்பத், அசோக்பாபு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், டி.ஜி.பி., சீனிவாஸ், அரசு செயலர்கள் பத்மா ஜெய்ஸ்வால், கேசவன், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், தேசிய மாணவர் படை அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் கார்கில் போர் வீரர் நினைவு சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
கார்கில் போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கார்கில் போரில் பங்கேற்ற புதுச்சேரியை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் ரங்கசாமி சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.