கரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை
கரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை
ADDED : ஜூன் 24, 2026 03:50 PM
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரிக்கலாம்பாக்கத்தில், கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக அரசு பள்ளி இயங்கி வருகிறது. துவக்கம், நடுநிலை, உயர் நிலைபள்ளியாக இருந்த இப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
பள்ளியில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில், இருபதுக்கும் மேற்பட்ட குழு மற்றும் தனித்திறன் விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும், இப்பள்ளிக்கென தனியாக விளையாட்டு மைதானம் இல்லை.
இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் விளையாட்டு திறமையை வெளிப்படுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த காலங்களில் பள்ளி அருகில் இருந்த காலி மனைகளில் மாணவர்கள் விளையாடி வந்தனர்.
தற்போது அந்த காலி மனைகளில் வீடுகள் நிறைந்து விட்டது. இதனால் மாணவர்கள் தங்களின் விளையாட்டுத் திறனை முழுமையாக இழந்து விட்டனர். இங்கு பயிலும் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, போட்டிகளில் வென்று ஸ்போர்ட்ஸ் கோட்டாவில், அரசு வேலை பெறும் வாய்ப்பையும் இழக்கும் நிலை தொடர்கிறது.
எனவே, கரிக்கலாம்பாக்கம் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி, மாணவர்களின், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பை கல்வித் துறை ஏற்படுத்தி தர வேண்டும்.
