சேதாரப்பட்டு தொழிற்சாலையில் ரூ.5 லட்சம் காப்பர் திருடியவர் கைது
சேதாரப்பட்டு தொழிற்சாலையில் ரூ.5 லட்சம் காப்பர் திருடியவர் கைது
ADDED : ஜூன் 25, 2026 08:20 PM
புதுச்சேரி: சேதாரப்பட்டு தனியார் தொழிற்சாலையில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள காப்பர் பொருட்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சேதாரப்பட்டில் சீக்கெம் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்த போது, அங்கிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான காப்பர் பொருட்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து தொழிற்சாலை எஸ்டேட் மேலாளர் அரவிந்தன் சேதராப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். தொழிற்சாலையில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது, கம்பெனிக்கு பெயிண்டிங் வேலை செய்ய வந்திருந்த சுத்துக்கேணி, அம்பேத்கர் வீதியை சேர்ந்த வெற்றிவேல், 35; பாகூர், இருளஞ்சந்தை சிலம்பரசன் ஆகியோர் காப்பர் பொருட்களை திருடி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முகமது ேஷக் அலாவுதீன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சுத்துக்கேணியை சேர்ந்த வெற்றிவேலை, கைது செய்து விசாரித்தனர். அதில், தனியார் கம்பெனியில் பெயிண்டிங் வேலை செய்தபோது, தன்னுடன் பணியாற்றிய சிலம்பரசன் என்பவருடன் இணைந்து, 15 மற்றும் 20ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் காப்பர் பொருட்களை திருடி சென்றதை ஒப்புக் கொண்டார்.
அவரிடம் இருந்த 26 கிலோ காப்பர் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வெற்றிவேலை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், சிலம்பரசனை போலீசார் தேடி வருகின்றனர்.
