/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
17 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவிப்பு
/
17 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவிப்பு
17 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவிப்பு
17 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவிப்பு
ADDED : ஆக 10, 2024 04:48 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 55 ஏரிகள் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் துார்வாரப்படும். ஆறுகளில் 2 கி.மீ., ஒரு இடம் என, 17 புதிய தடுப்பணை கட்டப்படும் என, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, அங்காளன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் உடைந்த படுக்கை அணை எப்போது கட்டப்படும்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: புதிதாக படுக்கை அணை கட்ட ரூ. 20.40 கோடிக்கு மதிப்பீடு செய்து அரசாணை பெறப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் ரூ.19.85 கோடிக்கு கோரப்பட்டு, நிர்வாக காரணங்களால் 2 முறை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்.
அங்காளன் எம்.எல்.ஏ.,; கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் துவங்கப்படும் என கூறியும் எந்த வேலையும் நடக்கவில்லை. படுக்கை அணையை நம்பி தான் விவசாயம் நடக்கிறது. படுக்கை அணை இல்லாததால் திருபுவனை சுற்றுவட்டார பகுதியில் 55 அடிக்கு கிடைத்த தண்ணீர் தற்போது 300 அடி வரை சென்று விட்டது.
அமைச்சர் லட்சுமிநாராயணன்; பழைய விதிமுறைப்படி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதால் பணியை எடுக்க ஒப்பந்தாரர்கள் முன்வரவில்லை. விதியை திருத்தி புதிய கோப்பு அனுப்பியுள்ளோம்.
ஒப்புதல் கிடைத்தும் டெண்டர் விடப்பட்டு பணிகள் இந்தாண்டில் துவங்கும்.
அங்காளன் எம்.எல்.ஏ.,: குளம் குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி எப்போது துார்வார போகிறீர்கள். கவர்னரிடம் கடிதம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: புதுச்சேரியில் மொத்தமுள்ள 84 ஏரிக்களில், 55 ஏரிகள் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் துார்வார விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம்.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,: கால்வாய், ஓடைகளை ஆழப்படுத்தி, தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்; ஓடைகளில் தடுப்பணை கட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுச்சேரியில் 40 கி.மீ., துாரம் தான் ஆறுகள் ஓடுகிறது. அதில், ஏற்கனவே 25 தடுப்பணை இருக்கிறது. 3 கிமீ ஒரு தடுப்பணை இருப்பதால் தான் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. அதனை 2 கி.மீ., ஒரு தடுப்பணை என மாற்றி புதிதாக புதுச்சேரி காரைக்காலில் 17 தடுப்பணைகள் கட்ட உள்ளோம்.
பி.ஆர்.சிவா: நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் நிர்வாகம் உள்ளது. குளங்களை துார்வாரி ஆழப்படுத்தும் பணி அவர்களால் செய்ய முடியாது. அரசு நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அரசு பல நடவடிக்கையை எடுத்து வருகிறது. எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்.
முதல்வர் ரங்கசாமி: எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கும் அக்கறை அரசுக்கும் உள்ளது.
புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் நல்ல குடிநீர் கிடைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆறுகளில் தடுப்பணை கட்ட போகிறோம். கிராமங்களில் உள்ள ஏரி, குளங்கள் துாரவார கோரிக்கை விடுத்துள்ளீர்கள். நுாறு நாள் வேலை திட்டத்திலும் குளம் துார்வார நடவடிக்கை எடுப்போம்.
பொதுப்பணித்துறை மூலமும் குளம் துார்வாரும் பணி மேற்கொள்வோம் என கூறினார்.