/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்மாதிரி கிராமம் : சப் கலெக்டர் ஆய்வு
/
முன்மாதிரி கிராமம் : சப் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 08, 2024 11:09 PM

திருக்கனுார்: சந்தை புதுக்குப்பத்தை முன் மாதிரி கிராமமாக மாற்ற தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக சப் கலெக்டர் சோமசேகர அப்பாராவ் கொட்டாரு ஆய்வு செய்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம் கிராமத்தை மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் செல்வகணபதி எம்.பி., முன் மாதிரி கிராமமாக மாற்ற முடிவு செய்தார். இதையொட்டி கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்த மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் கடந்த 30ம் தேதி நடந்தது.
அதில், கிராமத்திற்கு நுாலகம், தகன மேடை, அங்கன்வாடி மையம், புதிய டிரான்ஸ்பார்மர், சிமெண்ட் களம் உள்ளிட்ட வசதிகள் அமைத்து தர வேண்டும். சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, வில்லியனுார் சப் கலெக்டர் சோமசேகர அப்பாராவ் கொட்டாரு, பொதுமக்கள் கோரிக்கைப்படி புதிய டிரான்ஸ்பார்மர், சிமெண்ட் களம், அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை அமைப்பதற்கான இடங்களை நேற்று ஆய்வு செய்தார். சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார். ஆய்வின் போது, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.