/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாவரவியல் பூங்காவை இனி காரில் சுற்றி பார்க்கலாம்
/
தாவரவியல் பூங்காவை இனி காரில் சுற்றி பார்க்கலாம்
ADDED : ஆக 18, 2024 04:25 AM

தாவரவியல் பூங்காவை இனி காரில் சுற்றி பார்க்கலாம். இதற்காக நான்கு பேட்டரி கார்கள் வாங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா, இந்தியாவின் தலைசிறந்த பூங்காக்களில் ஒன்று. பிரான்ஸ் நாட்டு தாவரவியல் அறிஞர் பெரோட் உலகின் பல பகுதிகளிலிருந்து தனித்துவம் மிக்க அரிய தாவரங்களை சேகரித்து சிறப்புமிக்க இந்த பூங்காவை உருவாக்கினார். இந்த பூங்கா,1826ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இங்கு, 1,500க்கும் அதிகமான வகைகளை சேர்ந்த மரங்கள், செடிகள் உள்ளன.
பல்வேறு நாடுகளை சேர்ந்த அரியவகை தாவரங்களும் உள்ளன. 22 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ள இந்த பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 13 கோடி ரூபாயில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூங்காவை சுற்றி பார்க்க 'மார்வெல்லா விண்டேஜ் பகி' என்ற நான்கு பேட்டரி கார்கள் வாங்கப்பட்டுள்ளது. இவை தாவரவியல் பூங்காவிற்கு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன. இவை பார்ப்பதற்கு பழங்கால கார்கள் வடிவினை ஒத்து இருக்கின்றன. ஒவ்வொரு காரிலும் 8 பேர் வரை அமரலாம். ஒவ்வொரு பேட்டரி கார்களின் விலை 8,76,572 ரூபாய்.
ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், '22 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாவரவியல் பூங்காவினை நடந்து சென்று தான் பார்வையிட வேண்டி நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், நடக்க முடியாதவர்கள் சிரமப்படுகின்றனர்.
அவர்களுக்காகவே, பழங்கால கார்கள் வடிவில் பேட்டரி கார்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிப்பது பேட்டரி காரில் செல்லு வது போலவே இருக்காது.
பழங்கால காரில் போவது போல சிறந்த அனுபவத்தை கொடுக்கும். பூங்காவை சுற்றி பார்க்க நினைக்கும் முதியோர்களுக்கு கைகொடுக்கும்.
சுற்றி பார்க்கும் கட்டணத்தை தாவரவியல் பூங்காவை பராமரிக்க நிர்வாகம் முடிவு செய்யும்' என்றனர். இனி, பழமையான தாவரவியல் பூங்காவினை கெத்தாக சுற்றி பார்க்கலாம் வாங்க...

