/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டர் மீடியனை நிரந்தரமாக மூட தடுக்கும் அரசியல்வாதி; கவர்னர் கைலாஷ்நாதன் நேரடியாக தலையிடுவாரா? கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
/
சென்டர் மீடியனை நிரந்தரமாக மூட தடுக்கும் அரசியல்வாதி; கவர்னர் கைலாஷ்நாதன் நேரடியாக தலையிடுவாரா? கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
சென்டர் மீடியனை நிரந்தரமாக மூட தடுக்கும் அரசியல்வாதி; கவர்னர் கைலாஷ்நாதன் நேரடியாக தலையிடுவாரா? கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
சென்டர் மீடியனை நிரந்தரமாக மூட தடுக்கும் அரசியல்வாதி; கவர்னர் கைலாஷ்நாதன் நேரடியாக தலையிடுவாரா? கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
ADDED : செப் 15, 2024 06:54 AM

புதுச்சேரி: கன்னியக்கோவிலில் வெட்டி எடுக்கப்பட்ட சென்டர் மீடியனால் நொடிக்கு நொடி விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தனியாருக்கு ஆதரவாக செயல்படும் ஒரு அரசியல்வாதி அழுத்தம் கொடுப்பதால் நிரந்தரமாக மூட முடியாமல் பொதுப்பணித் துறையினரும், போக்குவரத்து போலீசாரும் கைகட்சி வேடிக்கை பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும்.
புதுச்சேரி - கடலுார் தேசிய நெடுஞ்சாலையில், கன்னியக்கோவில் தனியார் ஒயின்ஷாப் எதிரே விபத்துகளை தடுப்பதற்காக, சாலையின் நடுவில் கான்கிரீட் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
இந்த சென்டர் மீடியன், சில மாதங்களுக்கு முன் திடீரென மர்மமான முறையில் வெட்டி எடுத்து ஒயின்ஷாப்பிற்கு செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.
தனியார் பாருக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுக்க, குனிந்து, வளைந்து கொடுத்த அதிகாரிகளும் இந்த கான்கிரீட் தடுப்பு சுவர் வெட்டி எடுக்க முழு ஆசி வழங்கினர்.
இதனால் தான் 10 அடிக்கு எழுப்பப்பட்ட சென்டர் மீடியன் மாயமானதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் இந்த சென்டர் மீடியன் இன்னும் நிரந்தரமாக மூடப்படவில்லை.
இங்கு தினசரி நடக்கும் விபத்தை கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறையினரும், போலீசாரும் சென்டர் மீடியனை நிரந்தரமாக மூட முயல்கின்றனர். ஆனால், அரசியல்வாதி ஒருவர் அங்குள்ள தனியார் ஒயின்ஷாப் மற்றும் பெட்ரோல் பங்க் கல்லா கட்ட வேண்டும் என்பதற்காக, சென்டர் மீடியனை நிரந்தரமாக மூட விடாமல், பொதுமக்களின் உயிரோடு விளையாடி வருகின்றார்.
இதனால், சென்டர் மீடியனை நிரந்தரமாக மூட வழி தெரியாமல் பொதுப்பணித்துறையினரும், போக்குவரத்து போலீசாரும் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
மக்களின் நலனை புறக்கணித்து, தனியாருக்கு ஆதரவாக சென்டர் மீடியனை நிரந்தரமாக தடுக்கும் அரசியல்வாதி யார்? ஓட்டு போட்ட மக்களை விட, அந்த அரசியல்வாதி பெரிய ஆளா... விலைமதிப்பற்ற மனித உயிர்கள் முக்கியமா... அல்லது தனியார் ஒயின்ஷாப், பெட்ரோல் பங்க் கல்லா கட்டுவது முக்கியமா...
வெட்டி எடுக்கப்பட்ட சென்டர் மீடியனால் விபத்து நடந்து உயிர்பலி ஏற்பட்டால், யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். அரசு இழப்பீடு வழங்குமா... அல்லது தனியார் ஒயின்ஷாப் வழங்குமா... இல்லை தடுத்த அரசியல்வாதி பொறுப்பு ஏற்று இழப்பீடு வழங்குவாரா...
எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் நடுநிலையோடு பணியாற்றுவோம் என்று தான் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி ஏற்கின்றனர். ஆனால், ஒரு அரசியல்வாதி சுயலாபத்திற்காக தடுக்கின்றபோது, அரசு அதிகாரிகளும் மவுனமாக கடமையை செய்யாமல் உள்ளனர். மக்களின் உயிர்களை பணயமாக வைத்து கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
அவ்வப்போது பேரிகார்டுகள் போட்டு போலீசார் தடுப்பு ஏற்படுத்தினாலும், அங்குள்ள ஒயின்ஷாப், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் துணிச்சலாக பேரிகார்டுகளை துாக்கி எறிந்து அரசுக்கு சவால் விடுகின்றனர்.
ஏதாவது ஒரு இழப்பு தங்களுக்கு ஏற்பட வேண்டுமென்று இந்த தனியார் வணிக நிறுவனங்கள் விரும்புகின்றனவா என்று தெரியவில்லை.
மக்களின் கடைசி நம்பிக்கையை கவர்னர் கைலாஷ்நாதனிடம் வைத்துள்ளனர். கவர்னர் நேரடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு வெட்டி எடுக்கப்பட்ட சென்டர் மீடியனை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும்.