ADDED : ஆக 10, 2026 06:13 PM
மல்டிலேயர் மறுசூழற்சியில் புதுச்சேரி.... தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆய்வு
புதுச்சேரி: மல்டி லேயர் பிளாஸ்டிக் மறுசூழற்சியில் புதுச்சேரி தென் மாநிலங்களுக்கு முன்னோடி என்று அறிவித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நேரிலும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்தது.
உணவுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சலவைப் பொருட்களைப் பாதுகாப்பாகப் பேக்கிங் செய்வதற்கு மல்டி லேயர் பேக்கேஜிங் எனப்படும் பல அடுக்கு கொண்ட பேக்கேஜிங் முறை பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பேக்கேஜிங் தயாரிப்பில் காகிதம், லேமினேட்டிங் பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய உலோகம் ஆகிய மூன்று வெவ்வேறான அடுக்குகள் ஒன்றிணைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
இதில் அலுமினிய உலோக அடுக்கு பிணைக்கப்பட்டுள்ளதால், இக்கழிவுப் பொருட்களை வழக்கமான பிளாஸ்டிக் மறுசுழற்சி முறைகள் மூலம் மறுசுழற்சி செய்வது மிகவும் கடினமான சவாலாக நிலவி வந்தது.
மறுசுழற்சி செய்வதில் உள்ள இத்தகைய தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக, பயன்பாட்டிற்குப் பிறகு இக்கழிவுகளைச் சேகரிப்பதற்கு கழிவு சேகரிப்பாளர்களோ அல்லது மறுசுழற்சி செய்யும் அமைப்புகளோ முன்வருவதில்லை.
இதன் காரணமாக, பெருமளவில் தேங்கும் இக்கழிவுகள் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்ற நீர்நிலைகளைச் சென்றடைந்து நீர் ஆதாரங்களை கடுமையாக மாசுபடுத்துகின்றன. மேலும், நகராட்சி குப்பைகளுடன் இவை தரம் பிரிக்கப்படாமல் சேர்வதால், ஒட்டுமொத்தக் கழிவு மேலாண்மைக்கும் முட்டுக்கட்டையாக அமைந்து சுற்றுச்சூழல் சமநிலையை சீர்குலைத்து வருகின்றன.
ஆனால் நல்ல வேளையாக புதுச்சேரி மல்டி லேயர் மறுசூழற்சியில் தென்மாநிலங்கள் அளவில் முன்னோடியாக உள்ளது. மல்டி லேயர் மறுசூழற்சியில் உள்ள அலுமினிய கோட்டினை மறுசுழற்சி செய்து பைப்புகள், பேரி பேக்குகள் செய்ய மூலப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. திருபுவனையில் பத்மா பாலிமர், சேதராப்பட்டில் லட்சுமி பிளாஸ்டிக் இது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில் ஏற்கனவே பாராட்டி இருந்தது.
மல்டி லேயர் பிளாஸ்டிக் பேக்கேஜிங் கழிவுகளால் ஏற்படும் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் நீர்நிலை மாசுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 2022ம் ஆண்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின் போது, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் சார்பில், எப்படி மல்டிலேயர் குப்பைகள் மறுசூழற்சி செய்யப்படுகின்றன என்று விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் இயங்கி வரும் சில சிறப்புத் தொழிற்சாலைகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இத்தகைய பல அடுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் வெற்றிகரமாக மறுசுழற்சி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் இச்சிறப்பான செயல்பாட்டையும் தொழில்நுட்பத் தீர்வையும் கருத்தில் கொண்ட சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், புதுச்சேரியில் பின்பற்றப்படும் இந்த நவீன மறுசுழற்சி முறையை மற்ற தென்மாநிலங்களும் தவறாமல் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியதோடு தற்போது நெரிலும் ஆய்வு செய்தன.
இதற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று புதுச்சேரிக்கு வருகை தந்து ஆய்வு நடத்தியுள்ளது. இக்குழுவில் தென்மாநிலங்களைச் சேர்ந்த 30 பசுமைத் தீர்ப்பாய வழக்கறிஞர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இக்குழுவினர் புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மல்டி லேயர் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் நவீன தொழிற்சாலைக்கு நேரில் சென்று, கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும் முழு செயல்முறையையும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, தொழிற்சாலையில் கையாளப்படும் அதிநவீன மறுசுழற்சி தொழில்நுட்பங்கள் மற்றும் கழிவு மேலாண்மை முறைகள் குறித்து உயர்மட்டக் குழுவிற்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் தொழிற்சாலையின் உரிமையாளர் குணசேகரன் ஆகியோர் தொழில்நுட்ப செயல்முறைகளை நேரில் விளக்கினர். சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பல அடுக்கு பிளாஸ்டிக் கழிவுகளுக்குப் புதுச்சேரி கண்டறிந்துள்ள இந்த மறுசுழற்சி தீர்வு, கழிவு மேலாண்மைத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகும்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த வழிகாட்டுதலின் மூலம், தென்மாநிலங்கள் முழுதும் இத்தொழில்நுட்பம் பரவலாக்கப்படும் போது, நீர்நிலைகள் பாதுகாக்கப்படுவதோடு பிளாஸ்டிக் மாசுபாடற்ற எதிர்காலத்தை நோக்கிய பயணமும் விரைவுபடுத்தப்படும்.
