/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச கிக் பாக்ஸிங், மல்யுத்தம், கராத்தே போட்டியில் தங்க பதக்கங்களை குவிக்கும் சாதனை மாணவி
/
சர்வதேச கிக் பாக்ஸிங், மல்யுத்தம், கராத்தே போட்டியில் தங்க பதக்கங்களை குவிக்கும் சாதனை மாணவி
சர்வதேச கிக் பாக்ஸிங், மல்யுத்தம், கராத்தே போட்டியில் தங்க பதக்கங்களை குவிக்கும் சாதனை மாணவி
சர்வதேச கிக் பாக்ஸிங், மல்யுத்தம், கராத்தே போட்டியில் தங்க பதக்கங்களை குவிக்கும் சாதனை மாணவி
ADDED : ஆக 29, 2024 07:13 AM

புதுச்சேரி: சர்வதேச அளவில் கிக் பாக்ஸிங்., மல்யுத்தம், கராத்தே போட்டிகளில் நெட்டபாக்கம் மாணவி தங்க பதக்கங்களை குவித்து சாதனை படைத்து வருகிறார்.
நெட்டபாக்கம் அம்மாபேட்டை வீதியைச் சேர்ந்தவர் சங்கவி. ஹோலிபிளவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். 1ம் வகுப்பு முடித்து ஆண்டு விடுமுறையில் நடக்கும் சம்மர் கராத்தே பயிற்சியில் சேர்ந்தார்.
அடுத்த ஆண்டு 2ம் வகுப்பு படிக்கும்போது, கொல்கத்தாவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று, 2ம் பரிசு பெற்று சாதனை படைத்தார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடக்கும் கராத்தே போட்டியில் பங்கேற்று பதக்கங்களை குவிக்க ஆரம்பித்தார்.
8ம் வகுப்பு படிக்கும்போது கடந்த 2020ம் ஆண்டு டில்லியில் நடந்த இன்டர்நேஷ்னல் கிக் பாக்ஸிங் போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். அதேபோல், 10ம் வகுப்பு படித்தபோது, 2022ம் ஆண்டு டில்லியில் நடந்த போட்டியிலும் 2வது முறையாக தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
காராத்தே மட்டும் இன்றி, கிக் பாக்ஸிங், மல்யுத்தம், டேக்வாண்டோ, சிலம்பம், பேம்போ அகிடோ, ஜூடோ உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார். இதுவரை 35க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களையும், 20 வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார்.
வரும் 2026ம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடக்கும் உலக அளவிலான சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதிற்காக, சமீபத்தில் டில்லி சென்ற 10 நாள் மல்யுத்த பயிற்சி பெற்று திரும்பினார்.
குடும்பத்தில் நிகழ்ந்த பல பிரச்னையில் சிக்கி தவித்த மாணவி சங்கவியை, அவரது தாய்மாமன் நெட்டபாக்கம் பூபதி, சிறு வயது முதல் பராமரித்து ஒவ்வொரு போட்டிக்கும் அழைத்து சென்று உறுதுணையாக இருந்து வருகிறார்.
பயிற்சியாளர் கராத்தே இளங்கோ கூறுகையில்; மாணவி சங்கவி கராத்தே மட்டும் இன்றி பல்வேறு போட்டியில் திறமை மிக்கவர். மாநிலம், தேசிய அளவில் பல போட்டியில் பங்கேற்றால் தான், இன்டர்நேஷ்னல் போட்டியில் பங்கேற்க முடியும்.
சிறு வயது முதல் தொடர் பயிற்சி மூலம் இன்டர்நேஷ்னல் போட்டியில் பங்கேற்று சாதனைகளை புரிந்து வருகிறார். அவரது படிப்பு மற்றும் பயிற்சிக்கு ஹோலிபிளவர் பள்ளி நிர்வாகம் உதவி செய்து வருகிறது. டோக்கியோவில் நடக்க உள்ள சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறார் என கூறினார்.
குடும்ப சோதனையிலும், பல போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வரும் மாணவி சங்கவிக்கு, மாநில அரசு கை கொடுத்து துாக்கி விட முன்வர வேண்டும்.