/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமூக நலத்திட்டங்கள்: கவர்னர் பாராட்டு
/
சமூக நலத்திட்டங்கள்: கவர்னர் பாராட்டு
ADDED : மார் 11, 2025 05:53 AM
புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய கவர்னர் கைலாஷ்நாதன் அரசின் சமூக நலத்திட்டங்களை பாராட்டினார்.
அவர் உரையாற்றியதாவது:
நான் கவர்னராக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றது முதல் அரசின் பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றேன். காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களை பார்வையிட்டேன். மேம்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், அரசு ஊழியர்களின் பணிகளுக்கு எனது பாராட்டுகள். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும் தான் மாணவர்கள், முதியோர்கள், மாற்றுதிறனாளிகள், நலிவுற்றவர்கள் உள்பட அனைவரும் சிறப்பான சமூக நல திட்டங்களின் மூலம் பயன் பெறுகின்றனர்.
பெஞ்சல் புயல் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அரசு குறுகிய காலத்தில் பெரிய மறுவாழ்வு முயற்சிகளை மேற்கொண்டது. குடிமக்களின் இயல்பு வாழ்க்கை மிக குறுகிய காலத்தில் மீட்டெடுத்துள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 177.22 கோடி நிவாரணத்தை அரசு சரியான நேரத்தில் வழங்கியது.
இதேபோல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்திய பகுதிகளில் பாதிக்கப்பட்ட 12,958 விவசாயிகளின் 8,679 ெஹக்டேர் பயிர்களுக்கு 22.11 கோடி வழங்கப்பட்டது. பெஞ்சல் புயல் உடனடி நிவாரணமாக 207.18 கோடி நிவாரணத்தை அரசு வழங்கியது.
நிவாரண தொகையை உடனடியாக அறிவித்த முதல்வருக்கு வாழ்த்துகள். நான் அறிந்தவரையில் நம்நாட்டில் இதுவரையில் விரைவாக வழங்கப்பட்ட நிவாரணங்களில் இதுவும் ஒன்று. இதேபோல் உடனடி நிவாரணமாக புதுச்சேரிக்கு ரூ. 61 கோடி நிதி அளித்த மத்திய அரசுக்கும் நன்றி. ஏற்கனவே வழங்கிய ரூ.22 கோடி பேரிடர் உதவியை சேர்த்து மத்திய அரசு ரூ.83 கோடி வழங்கியுள்ளது. இவ்வாறு கவர்னர் பேசினார்.