
குழப்பம் தெளிந்தது
என்ன படிப்பது என்ற குழப்பத்தில் இருந்த என்னை, எனது அம்மா இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். தற்போது, பொறியியலில் ஏ.ஐ., அல்லது இ.இ.இ., பிரிவை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளேன்.
கல்வி மட்டுமின்றி, நம்மை மேம்படுத்தி கொள்வதற்கான பல்வேறு ஆலோசனைகளை கல்வியாளர்கள் வழங்கினர். இங்கு வந்ததால், ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன். காரணம், பொறியியல் படித்தால், ஜப்பானில் வேலைவாய்ப்புகள் அதிகம். எதிர்காலத்தில் அங்கு சென்று வேலை செய்ய, இப்போதே இதை கற்றுக்கொண்டால் நல்லது. இதுபோன்ற ஏராளமான விஷயங்களை இங்கு வந்ததால் அறிந்து கொள்ள முடிந்தது.
நித்தீஷ், விழுப்புரம்.
உந்து சக்தியாக இருந்தது
மருத்துவம் படிக்க விரும்பிய நான், இங்கு வந்ததன் மூலம் மருத்துவத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை தெரிந்து கொண்டேன். மேலும், 'சென்டாக்' நடைமுறை மற்றும் கியூட், நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.படிப்பில் ஆர்வம் இல்லை என்றாலும் கூட, கேட்டரிங் உள்ளிட்ட ஆர்வமுள்ள துறைகளை தேர்ந்தெடுத்து சாதிக்கலாம் என வல்லுநர்கள் விளக்கியது, மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்தது. நகர்ப்புற மாணவர்களை விட, கிராமப்புற மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி கூடுதல் பயனளிக்கும். அனைத்து தரப்பு மாணவர்களும், தவறாமல் கட்டாயம் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சி இது.
பூஜா ஸ்ரீ, புதுச்சேரி.
பயனுள்ள நிகழ்ச்சி
சென்டாக் கவுன்சிலிங் மற்றும் நுழைவுத்தேர்வுகள் குறித்து அறிந்து கொள்ள வந்தேன். ஆனால், அதை தாண்டி ஏகப்பட்ட தகவல்களை அறிந்து கொண்டேன். துணை மருத்துவ படிப்புகள் குறித்து, வல்லுநர் கூறிய கருத்துகள், பயனுள்ளவையாக இருந்தன. பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டையும் இணைத்து படிக்க, ஏதாவது படிப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்தது. அது இப்போது முழுமையாக தீர்ந்து விட்டது. அதேபோல, இங்கு ஒரே இடத்தில் இத்தனை ஸ்டால்களை ஒன்றாக பார்க்க முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அனைத்து ஸ்டால்களிலும், பொறுமையாகவும், விரிவாகவும், கல்வி பிரிவுகள், கல்லுாரிகள், வேலை வாய்ப்பு விவரங்களை விரிவாக விளக்கினர்.
வினோதினி, புதுச்சேரி

