போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய தெலுங்கானா வாலிபர் மீது வழக்கு
போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய தெலுங்கானா வாலிபர் மீது வழக்கு
ADDED : ஆக 08, 2026 05:50 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய தெலுங்கானா மாநில வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி துமாஸ் வீதியில் காவல் துறை தலைமையகம் அருகே டிராபிக் போலீஸ்காரர் ஜெயசீலன் என்பவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தார். அப்போது, துமாஸ் வீதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வெள்ளை நிற சுகுகி கார் ஒன்று அதிவேகமாக சென்றது. இது பற்றி மற்றொரு இடத்தில் பணியிலிருந்த போலீஸ்காரர் அஜித் என்பவருக்கு வயர்லெஸ் மூலம் ஜெயசீலன் தகவல் தெரிவித்தார்.
அங்கு போலீசார் காரை தடுத்து நிறுத்த முயன்ற போது, காரை ஓட்டி வந்த நபர் நிறுத்தாமல், போலீசார் மீது மோதும் வகையில் ஓட்டி சென்றார். இதையடுத்து, அருகேவுள்ள சிக்னல்களில் பணியிலிருந்த போலீஸ்காரர்களுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, காரை போலீசார் பின் தொடர்ந்தனர். காரை புஸ்சி வீதியில் பொதுமக்கள் உதவியோடு போலீசார் மடக்கி பிடித்தனர். காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர், தெலுங்கானா மாநிலம், நல்கொண்டாவை சேர்ந்த லுனாவத் நேரு மகன் லுனாவத் ராம்சரண், 26, என்பதும், அவர் மதுபோதையில் காரை ஓட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மதுபோதையில் அதிவேகமாகவும், அஜாக்ரதையாகவும் காரை ஓட்டியதாக லுனாவத் ராம்சரண் மீது டிராபிக் கிழக்கு போலீசார் வழக்குப் பதிந்தனர். காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
