UPDATED : அக் 10, 2026 08:50 PM
ADDED : அக் 10, 2026 08:47 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட இ.கம்யூ., வேட்பாளர் சலீம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாக நடைபெறும் என தேர்தல் துறை அறிவித்தது. தலைமை தேர்தல் அதிகாரி, இரண்டு துணை தேர்தல் அதிகாரிகள், கலெக்டர் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார், பறக்கும் படை, புகார்கள் பெறுவதற்கு தனி செல் என்று அமைக்கப்பட்டது.
ஆனால் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க தேர்தல் துறை தவறிவிட்டது. தேர்தலில் போட்டியிட்ட 3 பிரதான கட்சி வேட்பாளர்கள் சார்பில் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
முறைகேடுகளை தடுக்க ட்ரோன் கேமராக்கள் பறக்க விடப்படும். பறக்கும் படை துணிந்து செயல்படும் என, கூறிய தேர்தல் துறை ட்ரோன் கேமராவை பயன்படுத்தவில்லை.
இ.கம்யூ., சார்பில் நேரடியாக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் தெரிவிக்கும் போது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டை விலை பேசி வாங்கும் முறை அறவே ஒழிக்கப்பட்டால் தான். உண்மையான தேர்தல் நடைபெறும். இ.கம்யூ., கட்சிக்கு வாக்களித்தவர்கள், ஆதரவளித்த மா.கம்யூ., மா.லெனின் கட்சி, தேர்தல் பணியாற்றிவர்களுக்கு நன்றி. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
