UPDATED : அக் 10, 2026 08:50 PM
ADDED : அக் 10, 2026 08:47 PM
வில்லியனுார்: புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் மாதா கோவிலுக்கு பரிகார பாதயாத்திரை சென்றனர்.
புதுச்சேரியில் கடந்த 1977ம் ஆண்டு அக்., மாதத்தில் கடுமையான புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, வில்லியனுார் மாதா ஆலயத்திற்கு சென்ற பொதுமக்கள், புயலில் இருந்து புதுச்சேரியை காப்பாற்ற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். புயல் திசை மாறிச் சென்றதால் புதுச்சேரி பெரும் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டது.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்., இரண்டாவது சனிக்கிழமை பரிகார பாதயாத்திரை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இவ்வாண்டிற்கான பரிகார பாதயாத்திரை நேற்று மதியம் 2:00 மணியளவில் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஜென்ம ராக்கினி ஆலயத்தில் இருந்து துவங்கியது.
மாவட்ட முதன்மைக் குரு குழந்தைசாமி பாதயாத்திரையைத் துவக்கி வைத்தார். பாதயாத்திரை புஸ்சி வீதி, மறைமலை அடிகள் சாலை, ரெட்டியார்பாளையம், மூலக்குளம், அரும்பார்த்தபுரம், சுல்தான்பேட்டை வழியாகச் வில்லியனுார் மாதா ஆலயத்தைச் வந்தடைந்தனர்.
வில்லியனுாருக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்களை ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் ஆலய அடிகளார், பங்கு தந்தைகள் வரவேற்று ஆலயத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து மாதா ஆலய வளாகத்தில் சிறப்புத் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டனர்.
