/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெஸ்ட் புதுச்சேரியை நோக்கியே அரசின் பயணம்...தொடர்கிறது: எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு கவர்னர் பதிலடி
/
பெஸ்ட் புதுச்சேரியை நோக்கியே அரசின் பயணம்...தொடர்கிறது: எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு கவர்னர் பதிலடி
பெஸ்ட் புதுச்சேரியை நோக்கியே அரசின் பயணம்...தொடர்கிறது: எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு கவர்னர் பதிலடி
பெஸ்ட் புதுச்சேரியை நோக்கியே அரசின் பயணம்...தொடர்கிறது: எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு கவர்னர் பதிலடி
ADDED : மார் 11, 2025 05:55 AM

புதுச்சேரி: பிரதமர் மோடி கூறியதை போன்று பெஸ்ட் புதுச்சேரி நோக்கியே புதுச்சேரி அரசின் பயணம் தொடர்கிறது என எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பட்ஜெட் உரையில் பதிலடி கொடுத்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு பிரசாரத்திற்கு வந்த பிரதமர் மோடி, 'புதுச்சேரியை பெஸ்ட்' புதுச்சேரியாக மாற்றுவோம் என்றார். என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி அரசு 4 ஆண்டுகள் எட்டியுள்ள சூழ்நிலையில் எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இப்போது புதுச்சேரி மாநிலம் பெஸ்ட்டாக அல்ல; மிகவும் வொர்ஸ்ட்டாக போய்கொண்டு இருக்கின்றது என்று எதிர்கட்சிகள் கிண்டலடித்தன. இந்நிலையில், கவர்னரின் பட்ஜெட் உரை எதிர்கட்சிகளின் வொர்ஸ்ட் புதுச்சேரி விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்தது.
பெஸ்ட் புதுச்சேரி குறித்து பட்ஜெட் உரையின்போது கவர்னர் கைலாஷ்நாதன் கூறியதாவது:
பிரதமர் வழங்கிய தாரக மந்திரமான பெஸ்ட் புதுச்சேரி என்பதற்கேற்ப அரசு புதுச்சேரியை வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா, துறைகளில் சிறந்த மாநிலமாக உருவாக்க உறுதி கொண்டுள்ளது.
உதாரணமாக புதுச்சேரியை ஒரு வணிக மையமாக மாற்றிட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. சேதராப்பட்டு-கரசூர் பகுதியில் புதிய தொழிற்பண்ணை அமைக்கவும், மூடப்பட்ட ஏ.எப்.டி., மற்றும் சுதேசி, பாரதி மில் வளாகத்தில் உள்ள நிலங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஜவுளி பூங்கா அமைக்கவும், ஏக்தா மால் எனும் வணிகச்சந்தை மற்றும் வளர்ச்சி முன்னேத்திற்கான மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அடுத்து, புதுச்சேரியில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களை கொண்ட கல்வி கேந்திரமாக விளங்குகின்றது. இப்போது அரசின் கவனமானது புதிய கல்வி கொள்கையை வலுவாகவும் திறம்படவும் செயல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது.
அடிப்படை கல்வி கட்டமைக்கவும் உயர் கல்வி தரத்தை மேம்படுத்தவும் திறன் வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தி இளைஞர்களிடமிருந்து ஆற்றலை பெறவும் இது உதவும்.
மேலும் புதுச்சேரி சுற்றுலாவானது கடற்கரை, பாரம்பரியம், ஆன்மீகம், சமயம் போன்ற இழைகளால் ஆன நெசவாகும். நமது மாநில வளர்ச்சியில் சுற்றுலா முக்கிய இடம் வகிக்கின்றது. தற்போது ஆண்டிற்கு 19 லட்சம் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வருகின்றனர். 2047 ம் ஆண்டிற்குள் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வருவர். இதன் மூலம் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் தங்கும் சராசரி நாட்களை 1.5 நாட்களில் இருந்து 7 நாட்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தகை விரிவான திட்டமிடலுடன் புதுச்சேரி அரசு வளர்ச்சி நோக்கிய எண்ணத்துடன் உள்ளது. வழக்கமான பாணியில் இருந்து விலகி, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய மக்கள் நலம் சார்ந்த, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வளர்ச்சியை தர உறுதி பூண்டுள்ளது.
புதுச்சேரியின் சமமான வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு வளர்ச்சியிலும், நலத்திட்டங்களிலும் அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது. மாநிலத்தின் வளர்ச்சியானது சேவை மற்றும் தொழில் துறைகளை முதன்மையாக நம்பியுள்ளது.
எனவே அத்துறைகளில் முழு முனைப்பாக பணியாற்றி வருகின்றோம். மேலும் வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறைகளும், மின்னணு விவசாயம், மாற்றுபயிர்முறை, மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி பொருட்கள், கால்நடை உற்பத்தி, மீன் வளத் துறை தொடர்பான அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளன. அதன் அடிப்படையில் நவீன மீன் உற்பத்தி முறைகள், பொலிவான உட்கட்டமைப்பு, நவீனமாக்கப்பட்ட தொழில்நுட்ப திட்டம் மூலமாக நீலப் பொருளாதாரத்தை வலுவூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, மோட்டார் வாகனங்கள் தொடர்பான தொழில் துறைகள், சிறு, குறு தொழில் மேம்பாடு, புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவங்க ஏதுவான சூழ்நிலையை உருவாக்க உள்ளோம். இதன் மூலம் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி ஊக்குவிக்க முடியும்.
இவ்வாறு கவர்னர் உரையாற்றினார்.