/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உல்லாஸ் திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
உல்லாஸ் திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 03, 2024 11:45 PM

புதுச்சேரி: 'உல்லாஸ்' புதிய பாரதக் கல்வியறிவுத் திட்டத்தின் கீழ் 'வயது வந்தோர்களுக்கான கற்பித்தல் முறைகள்' குறித்து உல்லாஸ் திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
லாஸ்பேட்டை மாநில பயிற்சி மையத்தில் நடந்த முகாமிற்கு, திட்ட இணைப்பு அலுவலர் சுகுணா சுகிர்த பாய் தலைமை தாங்கினார். உல்லாஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். உதவி மாவட்டத் திட்ட அலுவலர் சுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். மாநில பயிற்சி மைய விரிவுரையாளர் பூர்ணா முன்னிலை வகித்தார்.
ஆசிரியர்கள் சுரேந்தர், சசிக்குமார் ஆகியோர் தன்னார்வல ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா தொகுத்து வழங்கினார். முகாமில் புதுச்சேரிப் பகுதியில் இருந்து 90 தன்னார்வல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வயது வந்தோர்களுக்கு எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை வாழ்க்கைத் திறன்களோடு இணைத்து எவ்வாறு கற்பிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கற்றல் மையங்களுக்குத் தேவையான உல்லாஸ் புத்தகம் மற்றும் பயிற்சித்தாள்கள் வழங்கப்பட்டன.
உல்லாஸ் திட்டத்தில் சேர்ந்து கற்க விரும்பும் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதவர்கள் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை அணுகியோ அல்லது மாநில பயிற்சி மையத்தை 0413-2255250 எண்ணில் தொடர்பு கொண்டோ தங்களை இணைத்துக் கொண்டு பயன்பெறலாம்.