ஏனாம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரச்னைகளை தீர்வுகாண வலியுறுத்தல்
ஏனாம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரச்னைகளை தீர்வுகாண வலியுறுத்தல்
ADDED : ஜூன் 01, 2026 07:31 PM
புதுச்சேரி: ஏனாம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரச்னைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரி அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம், துணை இயக்குநரை சந்தித்து வலியுறுத்தியுள்ளது.
ஏனாம் அரசு மருத்துவமனையில் செவிலிய அதிகாரிகளின் பணிச்சூழல், பாதுகாப்பு மற்றும் நோயாளி சேவையை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, அறுவை சிகிச்சை அரங்கம் நீண்ட காலமாக செயல்படவில்லை. போதுமான கழிப்பறை, இடைச்செய்தி தொடர்பு வசதி இல்லாததால் நோயாளி சேவை பாதிப்பு ஏற்பட்டு வருவதாக அரசு சுகாதார ஊழியர்கள் சங்கத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், செவிலிய அதிகாரிகள் சங்க தலைவர் சுனிலா குமாரி, செயலாளர் ஹரிதாஸ், பொருளாளர் சந்தானலட்சுமி, அமைப்பு செயலாளர் செல்வி, துணைப் பொதுச்செயலாளர் ஜெகநாதன் மற்றும் அகில இந்திய செவிலியர் சங்க செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டினா சங்கீதா ஆகியோர் ஏனாம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்து, ஏனாம் துணை இயக்குநரை சந்தித்து பேசினர்.
அதில், ஏனாம் மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு மற்றும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். செவிலியர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உடனே மேம்படுத்த வேண்டும். செவிலிய அதிகாரிகளுக்கு தொடர்பில்லாத பணிகளை நிறுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து நிதி உரிமைகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
