/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் பாடல் வெளியீடு ரத்தானது ஏன்?
/
போலீஸ் பாடல் வெளியீடு ரத்தானது ஏன்?
ADDED : ஆக 03, 2024 11:38 PM
பிரஞ்சு ஆட்சி காலத்தில் சிப்பாய் கம்பெனி என்ற பெயரில் செயல்பட்ட புதுச்சேரி போலீஸ் நிர்வாகம் கடந்த 1963 செப்., 30ம் தேதி வரை பிரஞ்சு சட்டப்படி இயங்கியது. புதுச்சேரியில் கடந்த 1963 அக்., 1ம் தேதி முதல் இந்திய சட்டம் அமலுக்கு வந்தது. நிர்வாக மாற்றத்திற்கு பிறகு டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி., சீனியர் எஸ்.பி.,, எஸ்.பி.,க்கள் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஆனால் போலீஸ் துறையின் இதயம் என வர்ணிக்கப்படும் போலீஸ் கையேடு (மேனுவல்) புதிதாக உருவாக்கப்படவில்லை.
போலீசின் கடமை, நிர்வாகம், சீருடை உள்ளிட்ட அனைத்து தகவல் உள்ள கையேடு நீண்ட போராட்டத்திற்கு பிறகு 60 ஆண்டுகள் கழித்து தற்போது உருவாக்கப்பட்டது. அத்துடன், புதுச்சேரி போலீசுக்கு என தனி பாடல் ஒன்றும் உருவாக்கப்பட்டது.
கையேடு மற்றும் போலீஸ் பாடல் வெளியிட்டு விழா கடந்த வாரம் சுகன்யா கன்வெர்ஷன் சென்டரில் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல்வர், உள்துறை அமைச்சர் என அனைவரும் பங்கேற்றனர். கடைசி நேரத்தில் தான் போலீஸ் பாடல் தயாரிப்புக்கு கவர்னரிடம் இருந்து அனுமதி கிடைக்காதது தெரியவந்தது. இதனால் பாடல் வெளியீடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
விழாவுக்கு போலீஸ் பாடல் சி.டி.,க்கள் கொண்டுவரப்பட்டது. கவர்னர் ஒப்புதல் கிடைக்காததால், போலீஸ் பாடல் வெளியீடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. போலீஸ் கையேடு மட்டும் வெளியிட்டு விழாவை முடித்து கொண்டனர்.