சுப்பையா நகரில் மின் கேபிள் பணிக்காக தோண்டப்பட்ட இடங்கள் சீரமைக்கப்படுமா
சுப்பையா நகரில் மின் கேபிள் பணிக்காக தோண்டப்பட்ட இடங்கள் சீரமைக்கப்படுமா
ADDED : மே 18, 2026 07:21 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரில் புதைவட மின் கேபிள் அமைக்கும் பணிக்கான தோண்டப்பட்ட பள்ளங்களில் முழுமையாக சாலை அமைக்கப்படாததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட சுப்பையா நகரில் கடந்த அக்டோபர் மாதம் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் புதைவட மின் கேபிள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. அதற்காக, சாலையின் ஓரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, மின் கேபிள்கள் புதைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கேபிள்கள் புதைக்கப்பட்ட இடங்களில் புதிதாக சாலைகள் அமைக்க ஒன்றை கற்கள் கொட்டப்பட்டது.
ஆனால், சாலை அமைக்கும் பணிகள் முழுமை பெறாததால், சுப்பையா நகர் பகுதி முழுதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி குடியிருப்புகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், பைக்கில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, முதியவர்கள் மற்றும் பள்ளிச் செல்லும் மாணவர்கள் இச்சாலைகளில் நடந்து செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
முதல்வர் தொகுதியிலேயே பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட திட்டத்தை அதிகாரிகள் விரைந்து முடிக்காமல், அலட்சியப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மின்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சுப்பையா நகரில் கிடப்பில் உள்ள புதைவட மின் கேபிள் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
