/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டுகளை மேம்படுத்த பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்படுமா?
/
விளையாட்டுகளை மேம்படுத்த பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்படுமா?
விளையாட்டுகளை மேம்படுத்த பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்படுமா?
விளையாட்டுகளை மேம்படுத்த பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்படுமா?
ADDED : ஜூலை 18, 2024 04:24 AM
புதுச்சேரி : வரும் பட்ஜெட்டில் விளையாட்டுகளை மேம்படுத்த தனியாக நிதி ஒதுக்கி, உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக விளையாட்டுக்காக தனியாக துறை இல்லை. விளையாட்டு என்பது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஒரு பிரிவாக இயங்கி வந்தது.
மேலும், புதுச்சேரி விளையாட்டு கவுன்சில், ராஜிவ்காந்தி விளையாட்டு பள்ளி ஆகியவையும் தனித்தனியாக செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நமச்சிவாயம், பல்வேறு விளையாட்டுகளை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
இதன் ஒரு பகுதியாக, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு என்ற தனியான துறை உருவாக்கப்படும் என சட்டசபையில் கடந்தாண்டு அறிவித்தார்.
அதன்படி, இளைஞர் மற்றும் விளையாட்டு இயக்குனரகம் உருவாக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக செயல்பட்டு வந்த புதுச்சேரி விளையாட்டு கவுன்சில், ராஜிவ்காந்தி விளையாட்டு பள்ளி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தமிழகத்தில் இருப்பதை போல, புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் தலைவராக முதல்வர் ரங்கசாமியும், துணைத் தலைவராக அமைச்சர் நமச்சிவாயமும் உள்ளனர்.
ஆனால், இளைஞர் மற்றும் விளையாட்டு இயக்குனரகத்திற்கும், ஆணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பணியாளர்கள் ஏதும் நியமிக்கப்படவில்லை. இதனால் விளையாட்டு துறை அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் முடங்கிபோய் உள்ளது. விளையாட்டுகளை மேம்படுத்தவும் புதிய திட்டங்கள் ஏதும் தீட்டப்படாமல் ஒப்புக்கு இயங்கி வருகின்றது.
இயக்குனராக இருந்த செந்தில்குமார் விடுவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் பள்ளிகல்வித் துறை இயக்குனர் பிரிதர்ஷினி தான் கூடுதல் பொறுப்பு அடிப்படையில் இந்த அமைப்பினை கவனித்து வருகின்றார். மாநில விளையாட்டு துறையே இப்படி இருந்தால் மாநிலத்தில் எப்படி விளையாட்டுகள் மேம்படுத்தப்படும் என விளையாட்டு சங்கங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
வரும் பட்ஜெட்டில், இளைஞர் மற்றும் விளையாட்டு இயக்குனரகத்திற்கும், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அதிக நிதி ஒதுக்கி உட்கட்டமைப்புகளையும், பணியாளர்கள் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.