/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் மாதா ஆலய பெருவிழா நாளை துவக்கம்
/
வில்லியனுார் மாதா ஆலய பெருவிழா நாளை துவக்கம்
ADDED : ஏப் 05, 2024 06:26 AM

புதுச்சேரி : வில்லியனுார் மாதா ஆலய பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதுகுறித்து ஆலய பங்குத் தந்தை ஆல்பர்ட் கூறியதாவது: வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலய பெருவிழா ஆண்டுதோறும் 'ஈஸ்டர்' பண்டிகை முடிந்த, 6ம் நாளில் கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம். அதன்படி நாளை (6ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்றைய தினம் காலை 5:30 மணிக்கு கூட்டு திருப்பலிக்கு பின்னர், மாதா உருவம் தாங்கிய திருக்கொடி பக்தர்கள் புடைசூழ திருக்குளத்தை சுற்றி பவனியாக கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து, ஆலய கொடிமரத்தில் புதுச்சேரி, கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கொடியேற்றி வைத்து, விழாவை துவக்கி வைக்கிறார். வரும், 13ம் தேதி வரை திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது. 14ம் தேதி, 147வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு காலை 7:30 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
அன்று மாலை 6:00 மணிக்கு கேரளா, சுல்தான்பேட்டை மறைமாவட்ட ஆயர் பீட்டர் அபீர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும், இரவு 7:30 மணிக்கு மாதாவுக்கு வைர கிரீடம் சூட்டப்பட்டு, ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் ஆல்பர்ட், ஆல்வின் அன்பரசு, தோமினிக் சாவியோ, திருத்தொண்டர் ஜியோ பிரான்சிஸ் சேவியர், அருட்சகோதரிகள், விழாக்குழுவினர் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

