ADDED : ஜூலை 20, 2026 05:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி, அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
காந்தி வீதி– நேரு வீதி சந்திப்பில் நேற்று நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். செயலாளர் இளவரசி, பொருளாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். அகில இந்திய அனைத்து பெண்கள் கூட்டமைப்பு தலைவர் சுதா சுந்தர்ராமன் கண்டனவுரை ஆற்றினார்.
போராட்டத்தில், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றுடன் அரசியலமைப்பு திருத்த மசோதாவாக அமல்படுத்த வேண்டும்.
அடுத்த தேர்தல்களில் இருந்து லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக கொண்டு வர வேண்டும். புதுச்சேரியில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.
