ADDED : ஆக 16, 2026 11:44 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் அதிவேகமாக கனரக வாகனங்கள் ஓட்டிய 22 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் பஸ்கள், லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதை தடுக்கும் வகையில், சிறப்பு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்துகளை தடுப்பதையும், அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 15 நாட்களில், பஸ்கள், மற்றும் லாரிகளை அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் இயக்கிய 22 டிரைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கனரக வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் பஸ் உரிமையாளர்கள், இயக்குநர்கள் சங்கத்தினருடன் நடைபெற்ற கூட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும், அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையான வாகன இயக்கத்தைத் தவிர்க்கவும், அனைத்து போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்படுமாறும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
