பைக் டாக்சி ஓட்டுநரை தாக்கிய 3 ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு
பைக் டாக்சி ஓட்டுநரை தாக்கிய 3 ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு
ADDED : நவ 21, 2026 09:33 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பைக் டாக்சி இளைஞரிடம் தகராறில் ஈடுபட்ட 3 ஆட்டோ டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பைக் டாக்சி சேவையை மையமாக கொண்டு ஆட்டோ டிரைவர்களுக்கும், பைக் டாக்சி டிரைவர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தப் பிரச்னை, தற்போது நேரடித் தாக்குதல் வரை சென்றுள்ளது.
இந்நிலையில், நேற்று (நவ.,20) புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரேபிடோ பைக் டாகசியை முன்பதிவு செய்த பெண்ணைச் சூழ்ந்துகொண்ட ஆட்டோ டிரைவர்கள் அவருக்கு மிரட்டல் விடுத்தனர். அவரை ஏற்றிச் செல்ல வந்த பைக் டாக்சி இளைஞரை சரமாரியாகத் தாக்கினர்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் பைக் டாக்சி இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் தேவா, சஞ்சய், சாண்டன் பிரான்சுவா தவுரான் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
