உரிமம் இன்றி மது விநியோகம் 3 ஓட்டல்களில் அதிரடி சோதனை
உரிமம் இன்றி மது விநியோகம் 3 ஓட்டல்களில் அதிரடி சோதனை
ADDED : அக் 15, 2026 01:54 AM
புதுச்சேரி: கலால் துறையின் முறையான உரிமம் பெறாமல் செயல்பட்ட மூன்று ஓட்டல்களில் கலால் துறையினர் அதிரடி சோதனை நடத்தி, 3 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரியில் கலால் துறையின் மூலம் முறையான உரிமம் பெறாமல் ஓட்டல்களில் மதுபானம் விநியோகிக்கப்படுவதை தடுக்க கலால் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
புதுச்சேரி நகரப் பகுதியில் இயங்கி வரும் மூன்று ஓட்டல்களில், கலால் துறையின் உரிமம் பெறாமல் உணவு அருந்தும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில், கலால் தாசில்தார் ராஜேஸ் கண்ணா தலைமையிலான குழுவினர் சந்தேகத்திற்கு இடமான அந்த ஓட்டல்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் அந்த ஓட்டல்களில் முறையான அனுமதியின்றி மதுபான விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அங்கு மதுபானங்களை விநியோகம் செய்த 3 நபர்களைக் கைது செய்த கலால் துறையினர், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நப ர்கள் மீது கலால் சட்ட விதிகளின்படி வழக்குப்பதிவு செய்தனர். கலால் விதிகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலால் துறை எச்சரித்துள்ளது.
