முன்விரோதத்தில் எதிரியை கொல்ல கத்தியுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது
முன்விரோதத்தில் எதிரியை கொல்ல கத்தியுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது
UPDATED : நவ 07, 2026 07:38 PM
ADDED : நவ 07, 2026 07:36 PM
புதுச்சேரி: காட்டேரிக்குப்பத்தில் முன்விரோதம் காரணமாக எதிரியை கொல்ல கத்தியுடன் பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கும்பல் கத்திகளுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கு கத்தியுடன் பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், சந்தை புதுக்குப்பம் ஒத்தவடை வீதியை சேர்ந்த சேகர் மகன் ஞானமூர்த்தி, 29; மாரியம்மன் கோவில் தெரு காந்தி மகன் கோகுல், 25; தமிழகப் பகுதியான வழுதாவூர், மாரியம்மன் கோவில் தெரு ரமேஷ் மகன் ரஞ்சித், 25; பக்கிரிப்பாளையம், அரிசி ஆலை தெரு மணிகண்ணன் மகன் மகத், 25, ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும், சந்தைப் புதுக்குப்பத்தை சேர்ந்த ரவுடியான ஞானமூர்த்திக்கும், அதேப் பகுதியை சேர்ந்த அதிசேஷன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணம், அவரை கொலை செய்யும் நோக்கத்துடன், தனது கூட்டாளிகளுடன் கத்தியுடன் பதுங்கி இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, அவர்களை காட்டேரிக்குப்பம் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 கத்திகள், 2 பைக்குகள், 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
