எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் குவிகிறது:6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க சென்டாக் அறிவுறுத்தல்
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் குவிகிறது:6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க சென்டாக் அறிவுறுத்தல்
UPDATED : ஆக 02, 2026 06:54 PM
ADDED : ஆக 02, 2026 06:21 PM
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு சென்டாக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) பி.ஏ.எம்.எஸ்., (ஆயுர்வேதம்), பி.வி.எஸ்சி., (கால்நடை மருத்துவம்) படிப்புகளுக்கு கடந்த 30ம் தேதி முதல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் சென்டாக் விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்கள் கடந்த நிலையில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
நேற்று வரை மொத்தம் 3,487 மாணவர்கள் இணையவழியில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2,204 மாணவர்கள் விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டுக்கு 439, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 210, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,517, வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவுக்கு 33 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
பிராந்திய ரீதியாக பார்க்கும்போது, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் மாணவர்கள் 649 பேரும், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் 1,517 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மேலும் என்.ஆர்.ஐ., பிரிவில் 33 பேரும், என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் பிரிவில் 96 பேரும், ஓ.சி.ஐ., பிரிவில் 5 பேரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
சிறப்பு இட ஒதுக்கீடு:: இதேபோல் விளையாட்டு உள்ளிட்ட சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. சிறந்த விளையாட்டு வீரர்கள் பிரிவில் 33 விண்ணப்பங்களும், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பிரிவில் 14 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 18 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 6 பேரும், தெலுங்கு சிறுபான்மையினர் பிரிவில் 6 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தற்போது வரை விண்ணப்பங்கள் எதுவும் பதிவாகவில்லை.
யார் யார் விண்ணப்பிக்கலாம்:: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பினை பொருத்தவரை அரசு ஒதுக்கீடு இடங்கள், கிறிஸ்துவ, தெலுங்கு பேசும் சிறுபான்மையினர் இடங்கள், அகில இந்திய நிர்வாக இடங்கள், என்.ஆர்.ஐ., சீட்டுகள் உள்ளன. ஆயுர்வேத படிப்பினை பொருத்தவரை அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கால்நடை மருத்துவ படிப்பினை பொருத்தவரை சுயநிதி, என்.ஆர்.ஐ., சீட்டுகள் உள்ளன.
மருத்துவ படிப்பில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு புதுச்சேரி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அகில இந்திய நிர்வாக இடங்கள், சுய நிதி இடங்களுக்கு புதுச்சேரி மாணவர்கள், பிற மாநில மாணவர்கள், ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்பிக்கலாம். கிறிஸ்துவ, தெலுங்கு பேசும் சிறுபான்மையினர் இடங்களுக்கு புதுச்சேரி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் எவ்வளவு:: அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளி பிரிவினருக்கு 500 ரூபாய் கட்டணம், இதர பிரிவினர் 1,000 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். நிர்வாக இடங்களுக்கு மாணவர்கள் 2 ஆயிரம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு, ஓ.சி.ஐ., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
