அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம்: புதுச்சேரியில் ஆக.,1ல் துவக்கம்
அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம்: புதுச்சேரியில் ஆக.,1ல் துவக்கம்
UPDATED : ஜூலை 16, 2026 07:32 PM
ADDED : ஜூலை 16, 2026 07:32 PM
புதுச்சேரி: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணிக்கான ஆட்சேர்ப்பு முகாம், வரும் ஆக., 1 முதல் 10ம் தேதி வரை புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இது குறித்து சென்னை ராணுவ ஆட்சேர்ப்பு மண்டலத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி அரசுடன் இணைந்து நடத்தப்படும் இந்த ஆட்சேர்ப்பு முகாமில், தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும், புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளலாம்.
மேலும், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிப்பாய் பார்மா, சோல்ஜர் நர்சிங் அசிஸ்டண்ட், நர்சிங் அசிஸ்டண்ட் வெடினரி, ஹாவில்தார் எஷூகேஷன், ரிலிஜியஸ் டீச்சார் ஷூனியர் கமிஷன் ஆபீசர் உள்ளிட்ட மத்தியப் பிரிவு பணிகளுக்கான நேர்காணலில் பங்கேற்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற்ற ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. இதில் தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் அட்டவணைப்படி நடக்கும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கு பெற வேண்டும். தேர்ச்சி முடிவகள் ராணுவ ஆட்சேர்ப்பு இணையதளத்தில் வாயிலாக தெரிவிக்கப்படும்.
இருப்பினும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து நேரத்தை வீணாக்காமல், தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுகளான உடற்தகுதித் தேர்வு, உடல் அளவீட்டுத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என, ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், வசிப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படங்கள் மற்றும் என்.சி.சி., விளையாட்டுச் சான்றிதழ்களை முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும்.
ராணுவ ஆட்சேர்ப்பு என்பது முற்றிலும் தகுதியின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. எனவே, இடைத்தரகர்கள் அல்லது பணத்திற்காக வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம் என ராணுவம் எச்சரித்துள்ளது.
சி.இ.இ., தேர்வு முடிவுகள் மற்றும் அனுமதி அட்டை பதிவிறக்கம் செய்ய, விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் www.joinindianarmy.nic.in தொடர்ந்து பார்வையிடவும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
