வானுார் அருகே கடன் பிரச்னை: அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை
வானுார் அருகே கடன் பிரச்னை: அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை
UPDATED : மே 11, 2026 05:35 PM
ADDED : மே 11, 2026 05:32 PM
வானுார்: வானுார் அருகே கடன் பிரச்னையால் அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்த போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அம்பேத்குமார், 46; அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி. இவருக்கு லோகநாயகி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள தனியார் பிஸ்கெட் கம்பெனியில் ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமித்து, அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு கம்பெனிக்கு வந்த அம்பேத்குமார், அங்கேயே துாங்கியுள்ளார். அதிகாலை யாரிடமோ மொபைல் போனில் சத்தமாக பேசிய விட்டு, கம்பெனி பின்பக்கமாக சென்றவர் அங்க, துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார், ஆரோவில் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த அவரது உறவினர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஏராளனோர் கம்பெனிக்குள் திரண்டனர். அங்கிருந்த போலீசாரிடம், கம்பெனி சரியாக வேலை செய்த பணத்தை வழங்காததால், அவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று சமாளித்து வந்தார். கடன் அதிகரித்தால், சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகா கூறிய உறவினர்கள், கம்பெனி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.
இது தொடர்பாக கம்பெனி நிர்வாகத்திடம் விசாரணை நடத்துவதாக போலீசார் உறுதி அளித்தனர்.
தற்கொலை குறித்து அவரது மனைவி லோகநாயகி கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும், கம்பெனி நிர்வாகத்தின் மீது அம்பேதகுமாரின் உறவினர்கள் கோபமடைந்து இருப்பதால், கம்பெனிக்குள் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
